Nammazhwar
நம்மாழ்வார்

நம்மாழ்வார் கலியுகம் தொடங்கிய நாற்பத்து மூன்றாம் நாளான பிரமாதி வருடம் வைகாசி மாதம் விசாகம் திருநட்சத்திரத்தில் காரியார் - உடைய நங்கை தம்பதியருக்கு மகனாகத் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் திருக்குருகூர் என்று அழைக்கப்படும் ஆழ்வார் திருநகரியில் தோன்றினார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன் என்பதாகும். இவர் திருமாலின் சேனைத் தலைவரான விஷ்வக்சேனரது அம்சமாகக் கருதப்படுகிறார்.

பிறந்த குழந்தை உலக இயல்புக்கு மாறாக அழுதல், பாலுண்ணுதல் முதலிய செய்யாமல் அதனை மறுத்தமையால் "சடகோபர்" என்று பெயர் பெற்றது. குழந்தையை திருக்குருகூரில் இருக்கும் பெருமாள் தலத்தில் உள்ள புளிய மரத்தினடியில் வளர்க்கத் தொடங்கினர். 16 ஆண்டுகள் கழித்து சடகோபர் ஞானமுத்திரையுடன் எழுந்தருளிய காலத்தில், இறையருளால் இவற்றை உணர்ந்த மதுரகவி ஆழ்வார் இவரைத் தேடி வந்து பணிந்து பலகாலம் தொண்டு புரிந்து வந்தார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் தமது இராமாயணத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்ற செல்லும்போது, நம் சடகோபனைப் பாடினையோ? என்று பெருமாள் கேட்க, கம்பர் "சடகோபர் அந்தாதி" பாடினார். பெருமாளே இவ்வாறு கேட்டதால் இவர் "நம்மாழ்வார்" என்று பெயர் பெற்றார்.

திருமாலின் சிறப்பை வியந்து நான்கு வேதங்களுக்கு இணையாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்களை அருளிச் செய்தார். திருவிருத்தம், 100 பாசுரங்களும், திருவாசிரியம் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதி 87 பாசுரங்களும், திருவாய்மொழி 1102 பாசுரங்களுமாக மொத்தம் 1296 பாசுரங்களை அருளிச் செய்தார்.

ஒப்புயர்வற்ற நம்மாழ்வார் எம்பெருமானது திருவடிகளாகவே கருதப்படுவதால் பெருமாளின் சன்னதியில் திருமாலின் பாதுகைகள் "ஸ்ரீசடாரி" என்று அழைக்கப்படுகிறது.

திருவாய்மொழி திருவிருத்தம் பெரிய திருவந்தாதி திருவாசிரியம்

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.